மும்பை (மகாராஷ்டிரா): மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் விமான நிலையத்தில், சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகியதால் நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து சிவில் விமான போக்குவரத்துத் துறையின் பொது இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பை விமான நிலையத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை வரை செல்லும் விஎஸ்ஆர் வென்ட்சர்ஸ் (VSR Ventures)க்குச் சொந்தமான லீர்ஜெட் 45 விடி - டிபிஎல் என்ற சிறிய ரக விமானம் இன்று (செப் 14) தனது 27வது ஓடுபாதையில் இருந்து விலகியது.
அந்த விமாணத்தில் 6 பயணிகள் மற்றும் 2 குழு உறுப்பினர்கள் இருந்தனர். இங்கு பெய்யும் கன மழைக்கு மத்தியில் 700 மீட்டர் தொலைவில் இதனை காண முடிந்தது. தற்போதுவரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை” என தெரிவித்தார். அதே போன்று இது தொடர்பாக பேசிய மும்பை விமான நிலைய பணி அதிகாரி, மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதில் நொறுங்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக கூறினார்.