டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 132ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அவரது நினைவிடத்திலும், ட்விட்டரிலும் அவருக்குத் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் மரியாதை
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, எங்களுக்குத் தேவையெல்லாம், அமைதியான தலைமுறை ஒன்றுதான் என்ற புகழ்பெற்ற நேருவின் வாசகத்தைக் குறிப்பிட்டு, "உண்மை, ஒற்றுமை, அமைதியைப் பெரிதும் மதித்த இந்தியாவின் முதல் பிரதமரை நினைவுகூருகிறேன்" என நேரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி சாந்திவானில் உள்ள நேருவின் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.