கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் அங்கு சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த நிலையில், இம்முறை பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் சரிக்கு சமமாக களத்திலிறங்கியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பு படியே பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, எல்.டி.எஃப் கூட்டணி 91 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. யு.டி.எஃப் கூட்டணி 42 தொகுதிகளிலும், பா.ஜ.க 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
தர்மதம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோரும் முன்னிலை பெற்றுள்ளனர்.
பா.ஜ.க கூட்டணியில் பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன், நேமம் தொகுதி கும்மனம் ராஜசேகரன், திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபி ஆகியோர் முன்னிலை வகித்துவருகின்றனர். 3 தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை வகிக்கும் நிலையில், முதன்முறையாக கேரளாவில் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.