டெல்லி:லதா ரஜினிகாந்துக்கு எதிரான மோசடி வழக்கின் குற்றச்சாட்டை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல் கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டதை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி:நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில், முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ஆம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், லதா ரஜினிகாந்த் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது, ஆதாரங்களைத் திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.