மும்பை: இந்தியாவின் மாபொரும் பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று மறைந்தார். அவரது மறைவு நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளது. நாட்டின் 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள், மிக உயரிய விருதுகள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என்று அவருடைய வரலாறு நீளுகிறது. இருப்பினும் '1983' உலக கோப்பைக்கும் லதா மங்கேஷ்கருக்கும் உள்ள வரலாறு, அவர் மீதான மரியாதை கோடி பங்கு உயர்த்தும்படி உள்ளது.
இந்திய வரலாற்றில் முக்கியமான நாளாக 1983 ஆண்டு ஜூன் 25ஆம் தேதி மாறுகிறது. ஜாம்பவான்கள் நிறைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா அணியிடம் தோல்வியை தழுவுகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ந்து போகிறார்கள். எதிர்பார்க்காத மகத்தான வெற்றியை பதிவு செய்து கபில் தேவ் தலைமையிலான வீரர்கள் இந்தியா திரும்புகிறார்கள். ஆனால் வீரர்களை வரவேற்கவும் கெளரவப்படுத்தவும் அப்போதைய பிசிசிஐயிடம் போதுமான நிதியில்லை. இதனையறிந்த லதா மங்கேஷ்கர் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்த காலகட்டத்திலேயே ரூ. 20 லட்சம் நிதி திரட்டி பிசிசிஐயிடம் கொடுக்கிறார். இதன்மூலம் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.