மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார் முன்னால் நியூசிலாந்து அணி வீரர் ஷேன் பாண்ட்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஷேன் பாண்ட்க்கு பதிலாக இலங்கை முன்னாள் வீரரும், முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியவருமான லசித் மலிங்கா, பந்து வீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் இது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவுப்பும் அணி நிர்வாகம் தரப்பிலோ அல்லது லசித் மலிங்கா தரப்பிலோ வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஷேன் பாண்டின் ஒப்பந்த காலமும் இன்னும் முடிவடையாத நிலையில் இதுகுறித்து அணி நிர்வாகம் நிதான போக்கை கடைபிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:India vs Ireland t20: தொடரை தக்க வைக்குமா அயர்லாந்து? இன்று 2வது போட்டி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 139 போட்டிகளில் லசித் மலிங்கா விளையாடி உள்ளார். அதில் ஒட்டுமொத்தமாக 195 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவரது எகானமி ரேட் 7.12 ஆகும். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் வரிசையில் மலிங்கா 6வது இடத்தில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மொத்தம் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு அங்கமாக லசித் மலிங்கா இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு மும்பை அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர், அடுத்த ஆண்டு அணியில் மீண்டும் சேர்ந்தார்.
2021ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த மலிங்கா. 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வேகப்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். ஷேன் பாண்ட் 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார்.
அவர் 2017 முதல் 2022 வரை அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். மேலும், முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ்கே பிரசாத் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:Virat Kohli: 500 கி.மீ. ஓடிய அபூர்வ நட்சத்திரம்.. 15 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை!