தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

UNFPA: உலக மக்கள்தொகையில் நம்பர் ஒன்.. இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்? - உலக மக்கள் தொகையில் இந்தியா நம்பர் ஒன்

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து இருந்தாலும் அதே மக்கள் தொகை பெருக்கத்தால் இந்தியா எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்பது விண்ணை முட்டும் பட்டியலாகவே காணப்படுகிறது.

Population
Population

By

Published : Apr 20, 2023, 8:03 AM IST

டெல்லி : ஐநாவின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை எண்ணிக்கை குறித்த அறிக்கையில் 142 கோடியே 86 லட்சம் என்ற எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனா 142 கோடியே 57 லட்சம் பேருடன் இரண்டாவது இடத்திற்கு சென்றது.

ஏறத்தாழ 29 லட்ச பேர் என்ற வித்தியாசத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது. 1950 முதல் உலக மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பில் ஐநா ஈடுபட்டு வரும் நிலையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா முதலிடத்தில் நீடித்து வந்தது. இந்நிலையில் முதல் முறையாக அந்த பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது.

அதிக மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சீனவில் 1980 ஆண்டுகள் வாக்கில் ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றோர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என சீனாவில் அறிவுறுத்தப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த திட்டம் திரும்பப் பெறப்பட்டது.

2016ஆம் ஆண்டுக்கு பிறகு பெற்றோர் இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்திய சீன அரசு 2021 ஆம் ஆண்டு அதை மீண்டும் திருத்தி 2 முதல் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது, இருப்பினும் கரோனா, மகப்பேறு குறைவு உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் சரிவை காணத் தொடங்கியது.

இந்நிலையில், ஐநாவின் உலக மக்கள் தொகை நிதியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. அந்த அறிக்கையின் கூற்றுப்படி, இந்தியாவில் 0 - 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 10 முதல் 19 வயது வரையிலானோர் 18 சதவீதம் பேரும் உள்ளனர்.

அதேநேரம் 10 முதல் 24 வயது வரையிலான மக்கள் 26 சதவீதம் பேர் என்றும் 15 முதல் 64 வயது வரையிலான மக்கள் என கணக்கிட்டால் 68 சதவீதம் பேரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் வெறும் 7 சதவீதம் பேர் மட்டும் இருப்பதாக ஐநா வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் இந்த ஜனத் தொகை பெருக்கத்தால் இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதிகபட்ச மக்கள் தொகை நாட்டின் வளங்களை வகிப்பதில் சுமையாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர், "அதிகாரப்பூர்வமாக உலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகம். நாட்டின் மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் 15 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்தியா ஒரு இளம் நாடு என்பதையும் அபார திறமை கொண்ட நாடு என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியா மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் ஒட்டுமொத்தமாக வளர்ந்து வருகிறது.

அதேநேரம் மக்கள் தொகை பெருக்கத்தால் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் வளங்களை நிர்வகிப்பதில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சுமையாக இருக்கும். அதேநேரம் வேலைவாய்ப்பு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்" என்றார்.

அதேநேரம் ஐநா வெளியிட்டு உள்ள அறிக்கையில், மக்கள் தொகை அதிகரிப்பால் இந்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளையும் இந்தியா மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு இந்தியா சரியாக முக்கியத்துவம் அளித்தால் வளமான எதிர்காலம் மற்றும் வல்லரசாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா, சீனாவுக்கு அடுத்தப்படியாக உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது.

34 கோடி மக்கள் தொகையுடன் அமெரிக்கா 3வது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 8 புள்ளி 45 பில்லியன் என்ற அளவில் உள்ளதாக ஐநா மக்கள் தொகை நிதியம்(United Nations Population Fund) தெரிவித்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்காலிகமாக தடைபட்டது. இல்லையெனில் நாட்டின் மக்கள் தொகை ஐநா வெளியிட்ட அறிக்கையை விட அதிகமாக காணப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2048 ஆம் ஆண்டு வாக்கில் தான் உலக மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் முன்கூட்டியே இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :20 நாட்களில் ரூ.187.17 கோடியிலான பொருட்கள் பறிமுதல் - கர்நாடகத் தேர்தலில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details