கோவா:புதிய பிரிட்டிஷ் உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸுக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்தை, கோவாவில் உள்ள நில அபகரிப்பாளர்கள் குறிவைத்துள்ளதாக காவல்துறை உயர் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத நில அபகரிப்பு மற்றும் மாற்றம் தொடர்பான புகார்களை விசாரிக்க இந்த ஆண்டு ஜூலை மாதம் காவல்துறை கண்காணிப்பாளர் நிதின் வல்சன் தலைமையில் ஒரு புலனாய்வு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதில், புதிய பிரிட்டிஷ் உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ், தனது பூர்வீக சொத்தை அபகரித்ததாக புகார் அளித்துள்ளதாக, வல்சன் தெரிவித்தார். அவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி எனவும், அவர்களிடம் இருந்து புகார் வந்த உடன், புகார் குறித்து 419 மற்றும் 420 எனற இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் வல்சன் தெரிவித்தார்.
மேலும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் சொத்துக்களை நில அபகரிப்பாளர்கள் குறிவைத்துள்ளதால், நிலம் உரிமையாளர்கள் அவர்களின் பதிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு புலனாய்வு சிறப்புக்குழு மக்களை வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக காவல்துறையினரை அனுகுமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது