தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடி அரசின் கோவிட்-19 செயல்பாடுகள் - கடுமையாக விமர்சித்த லான்செட்!

லண்டனிலிருந்து வெளிவரும் உலகப் புகழ்பெற்ற மருத்துவ வார இதழான லான்செட்டின் தலையங்கம்

The Lancet, Lancet scathing piece criticizes Modi govt, Covid mismanagement, Modi government, Indian Health Minister, Harsh Vardhan, Lancet criticizes Modi govt Covid response, லான்செட், மோடி அரசு குறித்து விமர்சனம், கொரோனா இந்தியா, இந்தியா கோவிட் 19  மோடி ட்வீட்
மோடி அரசை விமர்சித்த லான்செட்

By

Published : May 10, 2021, 5:44 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் தற்போது நிகழும் துன்பக் காட்சிகளைப் புரிந்துகொள்வது கடினம். மே 4 அன்று வரை, நாளொன்றுக்கு சராசரியாக 3,78,000 பேர் என்கிற விகிதத்தில் 20.2 மில்லியன் பேர் (இரண்டு கோடியே இருபது லட்சம்) கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 2,20,000 பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர். இந்தக் கணக்குகள் அனைத்துமே குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர் வல்லுனர்கள்.

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. முன்களப் பணியாளர்கள் முற்றிலும் களைப்படைந்துவிட்டனர். தொற்றுக்கு ஆளாகின்றனர். மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் போன்ற பிற அத்தியாவசிய தேவைகளுக்காக நம்பிக்கையற்றுப்போய் மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் சமூக வலைதளங்கள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன. ஆனாலும், மார்ச் மாதத்தின் இறுதியில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கைப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட இந்தியாவின் சுகாதார அமைச்சர் பெருந்தொற்றின் ‘இறுதி ஆட்டத்திற்கு’ வந்துவிட்டோம் என்று பிரகடனம் செய்தார்.

தவறான தோற்றைத்தை தரும் மத்திய அரசு

பல மாதங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்த போதிலும், நோயின் இரண்டாவது அலை அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உருமாறிய கரோனா தொற்று பரவி வருகிறது என்று எச்சரிக்கைகள் விடுக்கப் பட்ட பின்னரும் கூட கோவிட்-19ஐ தோற்கடித்து விட்டோம் என்கிற தோற்றத்தையே இந்திய அரசு தந்து கொண்டிருந்தது.

நோய் குறித்த ஆராய்ச்சியிலிருந்து உருவாக்கப்பட்ட மாதிரிகள், இந்தியர்களுக்கு கூட்டான கரோனா எதிர்ப்பு சக்தி (herd immunity) வந்துவிட்டது என்று தவறான நம்பிக்கையைத் தந்தமையால் அரசாங்கம் மெத்தனமாக இருந்தது மட்டுமின்றி போதுமான தயாரிப்பிலும் இறங்கவில்லை.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஜனவரியில் நோயாளிகளிடையே சீரம் எனப்படும் ரத்தத்தின் நீர்த்த பகுதியை ஆய்வு செய்து நடத்திய கணக்கெடுப்பில் 21 விழுக்காடு இந்தியர்களின் உடல்களில் மட்டுமே கோவிட்-19 வைரஸின் எதிர் உயிரிகள் இருக்கின்றன எனத் தெரியவந்தது. சில நேரங்களில் நரேந்திர மோடி அரசாங்கம் பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதைவிட ட்விட்டரில் வந்த விமர்சனங்களை நீக்குவதிலேயே அதிகக் குறியாக இருந்தது போல் தோன்றியது.

விழாக்களை ஊக்குவித்த அரசு

தொற்றினைப் பெருமளவு பரப்பும் நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதுமில்லாத மத விழாக்களையும், மாபெரும் அரசியல் கூட்டங்களையும் நடத்த அரசு அனுமதித்தது.

கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்கிற எண்ணத்தில் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தையும் மட்டுப்படுத்தியது; இதனால் மொத்த மக்கள் தொகையில் 2 விழுக்காட்டிற்கும் குறைவானர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு தடுப்பூசி கொள்கை குறித்து மாநிலங்களை கலந்தாலோசிக்காமலே திட்டத்தின் போக்கை மாற்றி 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என்று விரிவாக்கியதால் தடுப்பூசிகள் தீர்ந்து போயின; மாபெரும் குழப்பம் ஏற்பட்டது; தடுப்பூசி சந்தையில் மாநிலங்களும் மருத்துவமனைகளும் போட்டி போட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது.

நோயின் தாக்கம் அனைத்து இடங்களிலும் சமமாக இல்லை. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் திடீரென்று தொற்று எண்ணிக்கை உயர்ந்ததால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விரைவாகத் தீர்ந்துபோனது. மருத்துவமனையில் இடங்கள் சுருங்கின. மயானங்களில் உடல்களை எரிக்க இடமின்றிப்போனது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைப் படுக்கை வசதி சரியாக இல்லை என கருத்து சொல்பவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டங்கலள் பாயும் என்று எச்சரிக்கும் அளவுக்கு சில மாநில அரசுகள் சென்றன.

கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்கள், பிற மாநிலங்களைவிட அதிகமான தயார் நிலையில் இருந்ததால், இரண்டாம் அலையின்போது அவர்களுக்குத் தேவையான அளவு பிராணவாயுவை தயாரித்து உபரியை பிற மாநிலங்களுக்கு அனுப்பவும் முடிந்தது.

இந்தியா தற்போது இருமுனைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலில்,

  • குளறுபடி செய்யப்பட்ட தடுப்பூசித் திட்டத்தை சீர் செய்து அதை உரிய வேகத்தில் நடத்த வேண்டும். இதற்கு இரண்டு தடைகளை உடைக்க வேண்டும்.
  • தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்; சில தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டும். தடுப்பூசிக்கான விநியோகத் திட்டத்தினைத் தொடங்க வேண்டும்

இது நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது, பொது மருத்துவ சேவை, முதல்நிலை மருத்துவ மையங்கள் அதிகம் இல்லாது தவிக்கும், இந்திய மக்கள் தொகையில் 65 விழுக்காடு இருக்கும் (80 கோடி) கிராமப்புற மக்களுக்கும் சென்று சேருமாறு அமைக்கப்பட வேண்டும்.

வெளிப்படை தன்மை வேண்டும்

உள்ளூர் மக்களை நன்கு அறிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு தடுப்பூசி சமமான அளவு கிடைக்கச் செய்ய வேண்டும். தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் கோவிட் தொற்றுப் பரவலை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் இந்த நேரத்தில், அரசு சரியான புள்ளி விவரங்களைச் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும்; என்ன நடக்கிறது, தொற்றினைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் (முழு ஊரடங்கு உள்பட) என்பதை மக்களிடம் வெளிப்படை சொல்ல வேண்டும்.

கரோனாவின் புதிய வடிவங்களைக் கண்டறிந்து, புரிந்து கொண்டு, மேலும் புதிய வடிவங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக கரோனா மரபணு வரிசை ஆய்வை விரிவாக்க வேண்டும். மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டன. ஆனால் முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பெரும் கூட்டமாகக் கூடாமலிருப்பது, தாமாக முன் வந்து தனிமைப் படுத்திக் கொள்வது, பரிசோதனை செய்து கொள்வது ஆகியவற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கும் பணியைச் செய்வதில் மத்திய அரசுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. விமர்சனத்தையும் திறந்த மனதுடனான விவாதத்தையும் முடக்க பிரதமர் மோடி செய்யும் முயற்சிகள் மன்னிக்க முடியாதவை.

தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள் மோடி

ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் இந்தியாவில் 10 லட்சம் கோவிட் மரணங்கள் நிகழக்கூடும் என மருத்துவப் பகுப்பாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அப்படி நடந்தால் தானாகவே வருத்திக்கொண்ட ஒரு தேசியப் பேரழிவிற்கு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பத்தில் பெற்ற பலன்களை இந்தியா விரயம் செய்து விட்டது. கோவிட் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கிய தேசியக் குழு ஏப்ரல் மாதம் வரை கூடவே இல்லை. இதன் விளைவுகள் நம் கண்ணின் முன்னால் நிற்கின்றன.

பெரும் நெருக்கடியான இந்த நேரத்தில் இந்தியா தன் எதிர்வினையை மாற்றிக் கட்டமைக்க வேண்டும். அரசாங்கம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு, பொறுப்பு மிக்க தலைமையையும் வெளிப்படையான செயல்பாட்டையும் உருவாக்கி, அறிவியலை மையப் படுத்திய ஒரு பொது மருத்துவ எதிர்வினையை ஆற்றுவதைப் பொறுத்துதான் அதன் வெற்றி இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details