லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அக்டோபர் 3 (2021), போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின்போது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி இருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொலி காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில் தற்போது இது தொடர்பாக குற்றப்பத்திரிகை வெளியாகியுள்ளது. மொத்தம் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் உறவினர் அங்கித் தாஸ் ஆகியோர் உள்பட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.