டெல்லி: உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) நடந்த வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், லக்கிம்பூர் கேரி வன்முறை துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். வழக்கின் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (அக்.8) தள்ளிவைத்தது.