உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் காவல்துறையினர், விவசாயிகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் விவசாயிகள் தரப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியும் உத்தரப் பிரதேச அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகாரமே நடைபெறுகிறது. விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த உண்மை வெளியே வரக்கூடாது என பாஜக அரசு துடிக்கிறது.
இதன் காரணமாகத்தான் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை சந்திக்க செல்லும் அரசியல் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். யோகி ஆதித்யநாத் அரசு ராமராஜ்ஜியம் தருவதாக வாக்குறுதி தந்தது. ஆனால் கொலை ராஜ்ஜியத்தை நடத்துகிறது எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க:கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பெனி படையினர் குவிப்பு