பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை கருணை அடிப்படையில் குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்த அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை எதிர்த்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்குத் தொடர்பாக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட பெண்மணிக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் விடுவிக்கப்படக்கூடாது. அவ்வாறு விடுவிக்கப்பட்டால், அது பெண்களுக்கும், மனிதநேயத்துக்கும் அவமதிப்பாகும்.
பில்கிஸ் பானு அல்லது வேறு எந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அரசியல், சித்தாந்தம் எல்லாவற்றையும் கடந்து அவளுக்கு ஆதரவும், நீதியும் கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பல கோடி மதிப்புள்ள நிலங்களை கையாடல் செய்த ஆந்திர முதலமைச்சரின் குடும்பம்