கர்நாடகா: சிருங்கேரி கர்நாடகாவின் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ மலாஹனிகரேஷ்வர் கோயில் கர்நாடகாவின் தென்கோடியில் உள்ள சிருங்கேரியின் சாரதாபீடத்தில் உள்ளது. சிருங்கேரி சாரதா கோயிலில் இருந்து 1 கி.மீ., தொலைவிலுள்ள மலையில் மலாஹனிகரேஷ்வர் சிருங்கேரியின் முதன்மைக்கடவுளாக அமைந்துள்ளார். தக்ஷிணாம்நாய சங்கர சாரதா பீடத்தின் அனைத்து பிரமாணர்களும் பழங்காலத்திலிருந்தே இந்த மலாஹனிகரேஷ்வரரை வணங்கி வருகின்றனர்.
மாலஹனிகரேஸ்வரருக்கு கோயிலின் முன்புறம் 60 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று (பிப்.12) நடைபெற்றது. சிவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, சாரதா பீடத்தில் 11 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.12) மலாஹனிகரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாரதிதீர்த்த மஹாஸ்வாமியும், விதுசேகர பாரதி மகாசுவாமியும் இவற்றை நடத்தினர்.
அதிருத்ர மகாயாகம், சதுர்வேதங்கள், அஷ்டாதச புராண பாராயணம், ஜப ஹோமம் ஆகியவை நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மலாஹனிகரேஸ்வரர் சந்நிதியில் ஸ்தம்ப கணபதிக்கு கும்பாபிஷேகமும், சஹஸ்ர கலசாபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின், சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா பூஜை, மஹா நீராசனம் நடந்தது. பின்னர் விமான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது.