பெங்களூர் (கர்நாடகா):கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal - JDS) இந்த முறை தேர்தலைத் தனித்து எதிர் கொண்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கசப்பான அனுபவமாக அமைந்தது.
இந்நிலையில் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தேசிய கட்சிகள் தயாரான நிலையில், மதச் சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (National Democratic Alliance) இணைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகனும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான குமாரசாமி டெல்லி சென்று, பாஜக தலைவர்களைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இதுகுறித்த தகவலை பாஜக தலைவர்கள் ஜே.பி.நட்டா, அமித்ஷா அவர்களது X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம், பாரதீய ஜனதா உடன் கூட்டணியில் இணைந்ததில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு விருப்பம் இல்லை எனத் தகவல்கள் வெளிவந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்ததற்கு அந்த கட்சியின் கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா பிரிவுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். ஜேடிஎஸ் தலைவர்கள், பாஜக கூட்டணியில் இணைந்ததற்குப் பதிலாகக் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கலாம் எனக் கூறியதாகவும் தகவல்கள் வந்தபடி இருந்தது.