கண்ணூர்:மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு நடக்கும் வன்முறையால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என அஞ்சி கேரளா மாநிலம் வந்துள்ள நிலையில் அவர்கள் கல்வி கற்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கண்ணூர் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளன.
கேரளா வந்து பயில 70 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக 23 மாணவர்கள் கேரளா வந்துள்ளனர். இவர்களுக்குத் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்க கண்ணூர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ள நிலையில் அவர்களின் கல்விக்கு நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் நிதி வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த, மே மாதம் 3ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி மக்கள் இடையே ஏற்பட்ட பிரிவினை நாளடைவில் பெரும் கலவரமாக வெடித்தது. இதில், ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் மணிப்பூர் மாநிலமே போர்களமாக காட்சி அளித்தது. தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியானது.
பல்வேறு கட்டுப்பாடுகள், கலவரத்தால் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், மாணவர்கள் கல்வி கற்கச் செல்ல முடியாத நிலையில் அங்குள்ள மாணவர்களைக் கேரளாவில் படிக்க அழைத்து வர கண்ணூர் பல்கலைக்கழகம் திட்டமிட்டது.