ஹைதராபாத்: வட மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேரூன்றுவதற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், தெலங்கானாவில் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தி வருகிறது. நாளை வரை நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் ஹைதராபாத்திற்கு வருகை தந்தனர்.
முன்னதாக இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ், "வாட்ஸ்அப் பல்கலைக்கழக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அழகிய நகரமான ஹைதராபாத்திற்கு வருகை தருபவர்களை வரவேற்கிறோம்.
வாய்ச்சொல்லில் வீரர்களே, ஹைதராபாத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற தம் பிரியாணியையும், இரானி தேனீரையும் ருசிக்க மறந்துவிடாதீர்கள்" என்று கிண்டலாக கூறியுள்ளார்.
அதோடு, தெலங்கானாவில் உள்ள மிக முக்கியமான செயல்திட்டங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள அவர், "இவற்றையெல்லாம் கட்டாயமாக பாருங்கள், பிறகு குறிப்பு எடுத்துச்சென்று உங்களது மாநிலங்களில் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை வரவேற்கச்செல்லாமல், எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டம் - தென் மாநிலங்களுக்கு பாஜக ஸ்கெட்சா...?