பாலசோர் : கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாக நகர் அருகே விபத்துக்குள்ளானதில் 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாஹனாக நகர் அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த 180க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் விபத்தில் 100 பேருக்கு மேற்பட்டவரகள் உயிரிழந்து இருக்ககூடும் என தகவல் பரவி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு படையினருடன் உள்ளுர் மக்களும் சேர்ந்து விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து அறிய மற்றும் தகவல் வழங்க அவசர கால கட்டுப்பாட்டு எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்து குறித்து அறிந்துகொள்ள அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா) +91 67822 62286 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார்.
பாலசோர், கட்டாக உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா தலைமை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீட்பு பணிகள் குறித்து விசாரித்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், இந்த ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் சிக்கிக் கொண்டதாகவும் ஒடிசா மீட்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். மீட்பு பணி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக தமிழக அரசு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைந்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டு அறிந்தேன்.
அவர் கூறிய தகவல்கள் கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டு இருக்கிறேன். உடனடியாக உதவி மையம் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டு உள்ளேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா, "இரவு 7 மணியளவில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால், அதன் 3 முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டன" என்று தெரிவித்து உள்ளார்.
விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்து உள்ளது, மற்ற குழுக்களும் மீட்பு பணியில் சேர விரைந்துள்ளன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்தின் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என்று பதிவிட்டு உள்ளார்.
இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும்" என அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சோகச் செய்தியால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :Wrestlers Protest : மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை... விவசாய சங்கங்கள் கெடு!