திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 35 வயதான நபருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மையின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
குரங்கம்மை என்றால் என்ன :குரங்கம்மை என்பது வைரசிலிருந்து பரவும் அம்மை நோய். சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய், பிற்காலத்தில் மனிதர்களுக்கு பரவியது. அதனால், இது குரங்கம்மை என்று அழைக்கப்படுகிறது. குரங்கம்மை நோய் முதன் முதலில் 1958ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் 1970ஆம் ஆண்டு மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. காங்கோ குடியரசில் 9 வயதான சிறுவனுக்கு முதன்முதலில் குரங்கம்மை ஏற்பட்டது. பெரும்பாலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய இந்த நோய், தற்போது ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.
எப்படி பரவுகிறது :குரங்கம்மை ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. முதலில் எலிகள், குரங்குகள், அணில்கள் உள்ளிட்டவற்றில் குரங்கம்மை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. வனப்பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு பரவியது. உமிழ்நீர், தும்மல், இருமல், காயம் உள்ளிட்டவற்றின் மூலம் குரங்கம்மை வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. சின்னம்மை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு குரங்கம்மை எளிதில் பரவும் ஆபத்து உள்ளது.