கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப். கூட்டணி 99 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழா வரும் 20(மே 20) நடைபெறவுள்ள நிலையில், புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே. ஷைலஜா டீச்சர் பெயர் இடம்பெறாதது விவாதத்தை கிளப்பியுள்ளது.
இடம் மறுப்பின் பின்னணி:
ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் தராத நிலையில், அவரை தலைமை கொறடாவாக கட்சி நியமித்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மிகவும் பிரபலமான நபராக உருவெடுத்துவர் ஷைலஜா டீச்சர். நிபா வைரஸ் பாதிப்பின் போது அதை மிகச் சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்ட அவருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்தன.
அதேபோல் கோவிட்-19 பரவலையும் திறம்பட எதிர்கொண்ட மாநிலமாக கேரளா கூறப்படுகிறது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமிருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி திட்டத்தையும் மிகத்துரிதமாக கேரளா அரசு மேற்கொண்டுள்ளது.
தான் போட்டியிட்ட மட்டனூர் தொகுதியில் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வரலாற்று வெற்றிபெற்றுள்ளார். இவரின் பிரபலத்தன்மையின் மீது கண் வைத்தே பினராயி விஜயன் அமைச்சரவையில் இம்முறை இடமளிக்கவில்லை என்ற விவாதம் கிளம்பியுள்ளது. மாநிலத்தில் கட்சியை பினராயி விஜயன் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்து நடத்துவதாக கூறப்படுகிறது.
"கடந்த அமைச்சரவையில் இருந்த யாருக்கும், இம்முறை மறுவாய்ப்பு கொடுக்கப்படவில்லை(பினராயி விஜயனைத் தவிர). கட்சியை வளர்க்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் இம்முடிவுக்கு துணை நிற்கிறார்கள்" என சிபிஎம் சட்டப்பேரவை உறுப்பினர் சம்ஷேர் விளக்கமளித்துள்ளார்.
ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூட தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அதேபோல், பினராயி விஜயனின் மருமகனான முகமது ரியாசுக்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதும் வாரிசு அரசியல் என்ற அம்சத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க:நாடு முழுவதும் கோவிட் இரண்டாம் அலையில் 270 மருத்துவர்கள் பலி