உத்தரபிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள பன்வாடியா பகுதியின் கல்யாண் நகரில் வசித்து வருபவர், விக்ரேந்திர ஷர்மா. விலங்கு நல பிரியரான இவர், படவுன் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சமீபத்தில் பன்வாடியா பகுதியில் இருந்து நான் வந்து கொண்டிருந்தேன்.
அப்போது ஒருவர் தனது குழந்தைகளுடன் சேர்ந்து, எலியின் வாலை ஒரு கல்லால் கட்டி கால்வாயில் வீசினார். நான் அவ்வாறு செய்யக்கூடாது என கூறினேன். இருப்பினும் அவர்கள் அந்த எலியை வாய்க்காலில் வீசினர். எனவே நான் வாய்க்காலில் வீசப்பட்ட எலியை மீட்டேன்.
ஆனால், அதற்குள் எலி இறந்து விட்டது. எனவே எலியை கொன்றவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த எலியின் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஹர்பால் சிங் பல்யான் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட உள்ளூர்வாசியை, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதேநேரம் எலியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே விசாரணை தொடங்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:எரிபொருள் தீர்ந்ததால் ஆம்புலன்சை தள்ளும் அவலம் - நோயாளி அதிர்ச்சி மரணம்...