ராஞ்சி (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள துபுடானா காவல் நிலையத்தில் சந்தியா டோப்னோ என்பவர் சப் - இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் துபுடானா பகுதிக்குள் விலங்குகளைக் கடத்திச் செல்லும் பிக்கப் வேன் செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவலர் சந்தியா டோப்னோ உடன் இரண்டு காவலர்கள் வாகனங்களை சோதனை செய்யத் தொடங்கினார். அப்போது வந்த ஆல்ட்டோ காரை சோதனை செய்துவிட்டு, பின்னால் இருந்த பிக்கப் வேனை நிறுத்தினர். ஆனால், பிக்கப் வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் காவலர் சந்தியா மீது ஏற்றினார்.
இதில் சப் - இன்ஸ்பெக்டர் சந்தியா டோப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் பிக்கப் வேனை துரத்திச்சென்றதால், வாகனம் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் உயிரிழந்த சந்தியா டோப்னோவின் உடல் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண் சப் - இன்ஸ்பெக்டரின் பாதுகாவலரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை