டெல்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பிய கடிதத்தில் ராஜினாமா கடிதத்தில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். 1976ஆம் ஆம் ஆண்டு மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சிகளில் மத்திய அமைச்சராக பணிபுரிந்தேன்.
1980ஆம் ஆண்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். காங்கிரஸ் தலைவராக நீங்கள் 2 முறை ஆட்சியமைக்க காரணமாக இருந்தீர்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஒருமனதாக கேட்டீர்கள். முக்கிய பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்தீர்கள். இதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணம்.
ராகுல் காந்தி அரசியல் வருகைக்கு பின், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் முறை முற்றிலும் தகர்க்கப்பட்டது. மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டனர். அனுபவமற்ற உறுப்பினர்கள் கட்சியில் ஆளுமை செலுத்தினர். இந்த குழந்தைத் தனமான செயல்களால் இந்திய அரசின் மாண்பு சீர் குலைந்தது.
காங்கிரஸ் தலைவராக நீங்கள் பதவியேற்ற பின், குறிப்பாக 1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 3 முறை காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இப்போது வரை அமல்படுத்தப்படவில்லை. இவற்றை செயல்படுத்தும்படி உங்களிடமும் ராகுல் காந்தியிடமும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால், பரிசீலிக்கப்படவில்லை.