எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவில் கேரள மாநில விதைப் பண்ணை அமைந்துள்ளது. இதில், கடந்த 10 ஆண்டுகளாக ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. இந்த பண்ணையில் நெல் சாகுபடி முதன்மையாக உள்ளது. அதேபோல், காசர்கோடு குள்ள மாடுகள், குட்டநாடன் வாத்துகள், கோழிகள், மலபார் ஆடுகள் மற்றும் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள், அதிக மகசூலைத் தருகின்றன. நாட்டு அரிசி ரகங்களான ஞாவரா, ரக்தஷாலி, சோட்டாடி, வடக்கன் வெள்ளரி கைமா, பொக்கலில், அஸ்ஸாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜப்பான் வயலட், குமோல் சோல் ஆகியவையும் விதைகள் உற்பத்திக்காக பயிரிடப்படுகின்றன.
நெல் வயல்களில் கார்பன் வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், பூச்சி தாக்குதலை தடுக்கவும் வாத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கரிம உரம் தயாரிக்க மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அனைத்து கரிம கழிவுகளும் கரிம உரமாக மாற்றப்படுகிறது. மையத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் பண்ணைக்குத் தேவையான பெரும்பாலான மின்சாரத்தை வழங்குகின்றன. அரிசி வகைகளைத் தவிர, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு, எள், பப்பாளி, தக்காளி, குடைமிளகாய், முட்டைக்கோஸ், கத்தரி உள்ளிட்டவையும் இங்கு பயிரிடப்படுகின்றன.
இந்த பண்ணை, நாட்டின் முதல் கார்பன் நியூட்ரல் விதைப் பண்ணையாக அறிவிக்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி இந்த பண்ணையை "கார்பன் நியூட்ரல் பண்ணை" என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிக்கவுள்ளார்.