திருவனந்தபுரம்: பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண், சிறையிலுள்ள கத்தோலிக்க பாதிரியாரை திருமணம் செய்ய அனுமதிக்குமாறு தாக்கல் செய்த மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் சிரியன் - மலபார் கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ளது. இந்த திருச்சபையின் அருட்தந்தையாக ராபின் வடக்கன்சேரி (53) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
மேலும், அங்குள்ள ஒரு பள்ளியின் மேலாளராகவும் அவர் பொறுப்பு வகித்திருந்தார். இதனிடையே, அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ராபின் வடக்கன்சேரி மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோட தயாராக இருந்த ராபினை கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் காவல்துறையினர் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைதான அவருக்கு விசாரணை நீதிமன்றம், கடந்த 2019 பிப்ரவரி 17 இல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
இவ்வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயும் மாறினர். இருந்த போதிலும், நீதிமன்றம் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கியது. ஐம்பது வயதான கேரள கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கன்சேரியை, திருச்சபை பணிகளிலிருந்து வாடிகனால் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண், சிறையிலுள்ள ராபின் வடக்கன்சேரியை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இவர் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. திருமணத்திற்காகப் பாதிரியாருக்கு ஜாமீன் கோரிய மனுதாரரான பாதிக்கப்பட்ட பெண், தனது விருப்பப்படியே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராபின் வடக்கன்சேரி பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:பாலியல் வழக்கில் சிக்கிய கேரள பாதிரியாருக்கு போப் வழங்கிய தண்டனை