கோழிக்கோடு:கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான "காந்தாரா" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, மளையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தைப் போலவே பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் இப்படம் சாதனைப் படைத்தது. 100 நாட்கள் ஓடிய காந்தாரா சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள "வராஹ ரூபம்" என்ற பாடல் தங்களது நவரசம் ஆல்பத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த "தாய்க்குடம் பிரிட்ஜ்" (Thaikkudam Bridge) என்ற இசைக்குழுவினர் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திரையரங்குகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சில ஆப்களிலும் பாடலை ஒளிபரப்பத் தடை விதித்தது. இந்த வழக்கில் காந்தாரா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது.