திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தோல்வி அடைந்தார். இத்தேர்தலில் தொடக்கம் முதலே கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசி தரூருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கேரளாவில் இளைஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். கேரள காங்கிரஸில் முக்கிய பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சசி தரூர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேநேரம், தற்போது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி முழு வீச்சில் தயாராக வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சசி தரூர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கேரள முதலமைச்சராக போட்டியிடத் தயாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சசி தரூர், 'கட்சித் தலைமை முடிவு செய்தால், கேரள முதலமைச்சராகப் போட்டியிடத் தயார்' என்று தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், கேரளாவில்தான் கவனம் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டார். சசி தரூரின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.