மலப்புரம்:கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியை சேர்ந்தவர் சித்திக்(58). கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18ஆம் தேதி மாயமான சித்திக், கடந்த சில நாட்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில், டிராலி பேக்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஷிபிலி, ஃபர்ஹானா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கோழிக்கோடு அருகே உள்ள ஓலவன்னா பகுதியில் சித்திக் நடத்தி வந்த ஹோட்டலில் ஷிபிலி(22) பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால் ஏதோ காரணத்தால், ஷபிலியை வேலையில் இருந்து சித்திக் நீக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது ஷிபிலி கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் சித்திக்கிடம் இருந்து பணம் பறிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது தோழி ஃபர்ஹானா (18), அவரது நண்பர் ஆஷிக் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். சம்பவத்தன்று கோழிக்கோடு எரஞ்சிபாலம் பகுதியில் உள்ள ஹோட்டலில், சித்திக் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு ஷிபிலி, ஃபர்ஹானா, ஆஷிக் ஆகியோர் சென்றுள்ளனர். சித்திக்கை ஆபாசமாக படம் எடுத்து, அதன்பிறகு அவரிடம் பணம் கேட்டு மிரட்ட 3 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி சித்திக்கிடம் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.