திருவனந்தபுரம் : ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை, நேற்று முன்தினம் (ஆக.15) மாலை திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆக.16 முதல் வருகிற 23ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 19ஆம் தேதி முதல் ஓணம் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் 23ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும்.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 10 வயதுக்கு குறைவான சிறுவர்- சிறுமிகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே கேரள அரசு அறிவித்திருந்தது.
தந்தையுடன் சபரிமலை செல்ல சிறுமிக்கு அனுமதி இந்நிலையில், தற்போது சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளதால், தந்தையுடன் செல்ல விரும்பிய சிறுமி, தன்னை அனுமதிக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமி 10 வயது ஆவதற்கு முன்பு, தந்தையுடன் சபரிமலை செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறாள், ஏனென்றால், அதன் பிறகு அவரால் அடுத்த 40 ஆண்டுகளுக்குச் சபரிமலை கோயிலுக்கு செல்ல முடியாது என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தையுடன் சிறுமி சபரிமலை செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார். மாநில அரசின் உத்தரவின்படி, தடுப்பூசி போடப்பட்ட நபர்களுடன் குழந்தைகள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!