திருவனந்தபுரம் : கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளை கே - ஸ்டோர்ஸ் ( K-Stores) என அரசு மறுபெயரிட்டு உள்ளது. மேலும் பல்வேறு பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இந்த கே - ஸ்டோர்களில் மக்கள் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளை கே - ஸ்டோர்களாக மாற்றும் திட்டத்தை கேரள அரசு மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகள் மீதான மக்களின் பிம்பம் மற்றும் முகத்தை மாற்றும் முயற்சியாக அமையும் என அரசு தெரிவித்து உள்ளது.
ரேஷன் கடைகளை கே - ஸ்டோர் எனப்படும் ஹைடெக் மையங்களாக மாற்றும் திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அதில் ரேஷன் கடைகளை ஹைடெக் மையங்களாக மாற்றும் திட்டத்தில் மாநிம் முழுவதும் முதற்கட்டமாக 108 கே - ஸ்டோர்கள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்களாக மாற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இடதுசாரி ஜனநாயக அரசின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகள் அனைத்தையும் கே-ஸ்டோர்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் பிரனராயி விஜயன் தெரிவித்தார்.