கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் பெயரில் கோடி ரூபாய்க்கான தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், தகவல் தொழில்நுட்பத் துறையில் அலுவலராகப் பணிபுரிந்த ஸ்வப்னா கைதுசெய்யப்பட்டார்.
தங்கக் கடத்தல் தொடர்பாக சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவை விசாரணை நடத்திவருகின்றன. கடத்தலில் தொடர்புடைய பலரும் விசாரணையில் சிக்கினர்.
மூத்த ஐஏஎஸ் அலுவலரும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலருமான சிவசங்கரும் தங்கக் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல்செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்குக் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பிணை வழங்கினர். இதற்கு, அமலாக்கத் துறை சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அவர் வழக்கின் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, சிவசங்கரின் பிணை காலத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு குறித்து வலுவான ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்காததால் அவரின் பிணையை ரத்துசெய்ய இயலாது. வேண்டுமானால் மேல் முறையீடு செய்துகொள்ளலாம் எனக் கூறினார். மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தார்
இதையும் படிங்க:போதைப்பொருள் விநியோகமா? பிக்பாஸ் பிரபலம் வீட்டில் திடீர் ரெய்டு!