எர்ணாகுளம்: கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். டீக் கடை நடத்தி வரும் பிரதீஷ்க்கு தீராத வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களை அணுகாமல் அருகாமை மருந்தகத்தை அணுகிய பிரதீஷ்க்கு தீர்வு காணாமல் தொடர் வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜீரண கோளாறு மற்றும் உடல் நிலை மோசம் காரணமாக பிரதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீஷ்க்கு கல்லீரலில் தொற்று இருப்பதாகவும், நாள்பட்ட நோய் காரணமாக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிரதிஷின் குடும்பத்தின் தலையில் இடியாய் விஷயம் விழ, அறுவை சிகிச்சைக்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். கல்லீரல் தானம் வழங்கும் நபரை தேடி அலைந்த குடும்பத்தினருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. பிரதீஷின் ரத்த மாதிரிகளுடன் ஒத்துப் போகும் கல்லீரல் தானம் செய்யும் நபரை அவரது குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், தன் தந்தையின் அவலத்தைப் போக்க அவரது 17வயது மகள் தேவனந்தா கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். இந்திய மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-இன் படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால், தன் தந்தையின் உயிரைக் காக்க நீதிமன்றத்தில் தேவனந்தா முறையிட்டுள்ளார்.