இந்தியாவில் தாய்பால் வங்கி திட்டம் பல இடங்களில் அமலில் இருந்தாலும், கேரளாவில் தொடங்கப்படாமல் இருந்தது. இதை கருத்தில் கொண்டு, எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கொச்சி ரோட்டரி கிளப் உதவியுடன் ரூ.35 லட்சம் செலவில் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று முன்தினம்(பிப்.5) அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து ரோட்டரி கிளப்பை சேர்ந்த டாக்டர் பால் கூறுகையில், "முதல்கட்டமாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு மட்டுமே பால் இலவசமாக வழங்கப்படும். பிற மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து பின்னர் திட்டமிடப்படும். எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் சேகரிக்கப்படும். புதிதாக பிறந்த பிற குழந்தைகளின் உயிரை காக்கும் உன்னதமான பணியில் பங்கேற்க தாய்மார்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.