பத்தனம்திட்டா: கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் திவ்யா எஸ். ஐயர், ஐஏஎஸ், தனக்கு 6 வயதாக இருக்கும்போது 2 ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக வெளிப்படையாக தெரிவித்தார். நாட்டில் பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மகளிர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.
குறிப்பாக, 18 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் குறித்து வெளியே சொல்ல அச்சமும், தயக்கமும் காட்டுகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் போலீசார் மற்றும் மகளிக் குழுக்கள் உதவி உடன் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
இதனிடையே பிரபலங்கள், அரசு அதிகாரிகள் கூட தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாக வெளியே கூறி, பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா தனக்கு 6 வயதில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.