கொச்சி:கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், உளிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர், பிஜூ குரியன் (48). நவீன விவசாய தொழில்நுட்பங்களை பார்வையிடுவதற்காக இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் 28 பேர் அடங்கிய குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் முதன்மை செயலாளர் அசோக், விவசாயி குரியன் உள்ளிட்ட 28 பேரும், கடந்த 12-ம் தேதி இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், 17-ம் தேதி முதல் குரியனை காணவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம், குரியனை தவிர இஸ்ரேலுக்கு சென்ற 27 பேரும், கடந்த திங்கள்கிழமை கொச்சி திரும்பினர். அவர்கள் கூறுகையில், "கடந்த 17-ம் தேதி இரவு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பின்னர் தங்கும் விடுதிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தோம்.
ஆனால், நாங்கள் பயணித்த பேருந்தில், குரியன் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். குரியனை கண்டறிந்து, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்" எனக் கூறினர்.
இதற்கிடையே குரியன் தனது மனைவிக்கு செல்போனில் ஆடியோ மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தியாவுக்கு வர விருப்பமில்லை என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது. குரியனை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இஸ்ரேல் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 மாநிலங்களில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்!