கொச்சி :கேரளா மாநிலம் ஆலுவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தன் குடும்பத்துடன் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வந்து உள்ளார். கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளியின் 5 வயது மகளை, பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலம் என்பவர் கடத்திச் சென்று துன்புறுத்தி உள்ளார்.
சிறுமியை மது அருந்த கட்டாயப்படுத்தியும், கொடூர தாக்குதல் நடத்தியும் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 36 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. சோமன், கடந்த நவம்பர் 4ஆம் தேதி அஸ்பக் ஆலமை குற்றவாளி என அறிவித்தார். இந்நிலையில், இன்று (நவ. 14) வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
ஏறத்தாழ 26 நாட்களில் வழக்கின் மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நேரடி சாட்சிகள் ஏதும் பதிவு செய்யப்படாமல் அறிவியல் சான்றுகள் உள்ளிட்டவைகளை மட்டும் வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஸ்பக் ஆலம் ஏற்கனவே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமீனில் வெளிவந்த அஸ்பக் ஆலம், டெல்லியில் இருந்து கேரளாவிற்கு தப்பி வந்து தலைமறைவான நிலையில், அலுவாவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை செய்து உள்ளார். அஸ்பக் ஆலமிற்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் அஸ்பக் ஆலத்திற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பை வரவேற்று உள்ளார். குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க :பீகாரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.. 24 பேர் கவலைக்கிடம்!