வீட்டில் யானை வளர்க்கும் தம்பதி பாலக்காடு:5 வயதாகும் போது எங்கள் வீட்டுக்கு வந்தான் விஜய்.. இப்போ அவனுக்கு 27 வயசாகுது.. எங்களுக்கு அப்புறம் அவனை யார் பாக்க போறாங்க.. வயது முதிர்ந்த இந்த தம்பதியின் உரையாடலில் இடம் பெற்ற அந்த செல்லக்குட்டி விஜயை பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கவலையின் காரணம்.
ஆஜானுபாகுவாக ஆண் களிறுக்குரிய அத்தனை அம்சங்களுடன் மிரட்டலாக நின்றான் விஜய். அவனை வளர்த்த சந்தோஷமே எங்களுக்கு போதும்.! சாகும்போது எதை கொண்டு போகப்போகிறோம்..! என்கின்றனர் கண்களில் வாஞ்சையுடன்.
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ண குப்தன் மற்றும் பாருக்குட்டி. அரசு ஊழியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற இந்த தம்பதி, தற்போது தங்கள் வீட்டில் இயற்கையை ரசித்தபடி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி அழகாக வாழ்ந்து வருகின்றனர்.
வயது முதிர்ந்து தடியூன்றும் நிலையிலும், இவர்களின் அன்பை ஊன்றி நிற்கிறது இந்த பேருயிர்.. 84 வயதான ராமகிருஷ்ண குப்தனுக்கும் அவரது மனைவி 75 வயதான பாருக்குட்டிக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அவ்வளவு ஆர்வம். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அந்தமானிலிருந்து குட்டி விஜய் தங்களைத் தேடி வந்த கதையை விவரிக்கிறார் ராமகிருஷ்ண குப்தன்.
அந்தமானிலிருந்து அவனைக் கப்பலில் ஏற்றிச் சென்னை அழைத்து வந்து அங்கிருந்து லாரி மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அழைத்து வந்தோம். அன்று முதல் இன்று வரை அவன் எங்கள் வளர்ப்புப் பிள்ளையாகவே இருந்து வருகிறான்.
நாங்கள் எப்படி அவனைப் பெற்ற பிள்ளைபோல் நேசிக்கிறோமோ அதேபோல் அவனும் எங்களை நேசிக்கிறான் என்பத்தைத் தாண்டி அவனிடம் எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கூறும் பாருக்குட்டியின் பேச்சில் கனத்த தாயின் பாசம் வெளிப்பட்டது. எங்களுக்கு வயதாகிவிட்டது.. ம்ம்ம்ம் என நீட்டும் அந்த தாயின் பெருமூச்சில் தங்களுக்குப் பிறகு விஜய்க்கு யார் உண்டு என்ற கவலைதான் தெரிந்தது.
ஒரு மாதம் தங்கள் விஜய்க்கு வழங்கும் உணவு மற்றும் அவனைப் பராமரிக்கும் யானை காப்பான்களுக்கு வழங்கும் சம்பளம் உட்பட அனைத்தும் சேர்ந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவாவதாகத் தெரிவித்த ராமகிருஷ்ணனும், பாருக்குட்டியும் தங்களின் ஓய்வூதியம் மொத்தமும் விஜய்க்காக மட்டுமே செலவழிப்பதாக்கவும், அதில் தங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது எனவும் புன்னகையுடன் கூறுகின்றனர்.
அது மட்டும் இன்றி இந்த பணத்தைச் சேர்த்து வைத்து நாங்கள் சாகும்போது கொண்டா போகப்போகிறோம் அதில் ஒரு யானைக்குட்டி வளரட்டுமே எனக்கூறுகிறார் பாருக்குட்டி.. மேலும், தங்கள் பிள்ளை விஜய் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து அவனைத் தனியாக விட்டு விட்டு இதுவரை எங்கும் சென்றது இல்லை எனக்கூறும் இந்த வயதான தம்பதிகள் தங்கள் வாழ்நாளை மிக அர்த்தமுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
மேலும், விஜயால் உங்களுக்கு ஏதேனும் லாபம் இருக்கிறதா..உங்கள் மகன் ஏதாவது சம்பாதித்துக் கொடுப்பானா எனக் கேட்டபோது.. அவன் அவ்வப்போது கோயில் திருவிழா.. திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்குச் சென்று வருவான் எனவும் அதுவும் அவன் பணம் சம்பாதித்துத் தருவான் என்ற நோக்கத்தில் அல்ல..அவனைக் கண்டு பிறர் சந்தோசப்படுவார்கள்.. என்ற நோக்கம் மட்டும்தான் எனக்கூறுகிறார்கள் அந்த தம்பதிகள்.
கேரள மாநிலம் என்றாலே அழகுதான்... அங்குள்ள கதகளி முதல் கடலக்கறி வரை பல தனித்துவமான சிறப்புகள் உண்டு. அந்த சிறப்புகளில் யானை வளர்ப்புக்கும் தனி இடம் உண்டு. அம்மாநில வனத்துறையின் அனுமதியோடு மக்கள் பலர் தங்கள் வீடுகளில் நாய்க் குட்டி வளர்ப்பதுபோல் யானைகளை வளர்த்து வருகின்றனர்.
நாளும் அதற்கு அரிசிச் சாதம், பழங்கள் உள்ளிட்ட உணவுகளும்... நாள் தவறாமல் சுத்தமான குளியலும் முக்கியம். அந்த வகையில் விஜய்க்குப் பிடித்த உணவு அரிசி சாப்பாடுதான் எனக்கூறுகிறார் பாருக்குட்டி. தொடர்ந்து யானை பாப்பான்கள் விஜயை அழைத்து வந்து வாசலில் வைத்துக் குளிப்பாட்ட ஆரம்பித்ததும்.. அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
மல்லாக்கப் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டான். காப்பான்கள் மசாஜ் செய்வதுபோல் விஜயை தேய்த்து உரைத்து தண்ணீரை மேலே பீச்சி அடித்துக் குளிப்பாட்டினர். நல்ல சமத்தாகப் படுத்து நீராடிய விஜய்...ராமகிருஷ்ணனுக்கும், பாருக்குட்டிக்கும் செல்ல மகன்.
இதையும் படிங்க:கூகுள் மேப் பொய் சொல்லாது டா.. மேப்பை பார்த்து சென்று தண்ணீரில் சிக்கிய லாரி.. கோமாளி பட பாணியில் ஓர் சம்பவம்!