எர்ணாகுளம்:கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வியாபாரி மோன்சன் மாவுங்கல்.
இவரது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவரின் மகள் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர்களின் வறுமையை பயன்படுத்தி கல்விக் கட்டணம் கட்டப் பணம் தருவதாக கூறி, சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் பலமுறை அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று (ஜூன் 17) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது, நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவான நிலையில் அந்த நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5.25 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் வாதிட்ட மோன்சன் மாவுங்கல் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் மீது தொடரப்பட்டுள்ள மோசடி வழக்குகளை போலீஸாரால் நிரூபிக்கப்பட முடியாத நிலையில், தன்மீது பொய் பாலியல் வழக்கு சுமர்த்தி சிறையில் அடைக்க முயற்சிப்பதாக கூறினார். இது மட்டுமின்றி, மோன்சன் மாவுங்கல் தன்னிடம் அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலப் பொருட்கள் இருப்பதாக கூறி, பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இவரை கைது செய்த கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து பாலியல், பண மோசடி என மோன்சன் மாவுங்கல் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்தான் தற்போது பாலியல் வழக்கில் அவர் குற்றவாளி என்ற தண்டனை தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மேலும், மோன்சன் மாவுங்கல் பண மோசடி வழக்கில், கேரள மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுதாகரனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் தற்போது ஜாமீன் பெற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க:Savings Schemes: பெண் குழந்தை பெற்றவரா நீங்கள்? : செல்ல மகளுக்கான சூப்பர் சேவிங் திட்டங்கள்