பத்தனம்திட்டா: உருமாறிய கரோனா தொற்று வகையான ஒமைக்ரான், கடந்த நவம்பர் 24ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் பல நாடுகளில் தொற்று பரவியதை அடுத்து, சர்வேதச அளவில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
இருப்பினும், ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. டிசம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 63 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
4 பேருக்கு தொற்று
அதேபோல், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. கர்நாடகாவில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதானவருக்கும், 46 வயதான மருத்துவர் ஒருவருக்கும் டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறிப்பட்டது. இதுவே, இந்தியாவில் பதிவான முதல் ஒமைக்ரான் தொற்று.
இதன்பின்னர், வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. முன்னதாக, நேற்று (டிசம்பர் 13) ஆந்திரா, சண்டிகர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியானது.
இங்கிலாந்து - அபுதாபி - கொச்சி
இந்நிலையில், கேரளாவின் முதன்முறையாக ஒமைக்ரான் தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 6ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து அபுதாபி வழியாக கொச்சி வந்தடைந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
கொச்சி வந்தடைந்த பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என முடிவான நிலையில், 8ஆம் தேதி எடுக்கப்பட்ட மறுபரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்திலும், டெல்லியிலும் அவரின் பரிசோதனை மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்ட நிலையில், நேற்று ஒமைக்ரான் உறுதியானது.
கேரளாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தாயாருக்கும், மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஒமைக்ரான் தொற்றாளர் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில் அவரின் மாமியாரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
38 ஆக உயர்வு
மேலும், அவர் வேறு யாருடனும் அதிக தொடர்பில் இருக்கவில்லை எனவும் தொற்றாளரின் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளாவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. இதுவரை மகாராஷ்டிராவில் 18 பேருக்கும், ராஜஸ்தான் 9 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், டெல்லியில் இருவருக்கும், ஆந்திரா, சண்டிகரில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!