டெல்லி அரசின் கீழ் இயங்கும் ஜி.பி. பந்த் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் யாரும் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது என்றும், மருத்துவமனையில் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவின் முக்கிய மொழிகளில் ஒன்றான மலையாளத்தைப் பேசக்கூடாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல என அரசியல் கட்சியினர் உள்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவ்விவகாரம் விஷ்வரூபம் எடுத்திடுவே, சர்ச்சைக்குரிய உத்தரவைத் திரும்பப் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய உத்தரவு திரும்பப் பெற்றது வரவேற்புக்குரியது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "கலாசாரம், ஜனநாயகத்துடன் பொருந்தாத அத்தகைய உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தாமதமாக வந்தாலும், சரியான நிலைப்பாட்டை எடுத்திட அலுவலர்கள் முன்வந்தனர்.
மொழியின் அடிப்படையில் பணியாளர்களைப் பிரிக்க முயற்சிப்பவர்கள் விலகியிருக்க வேண்டும். மலையாளம் இந்தியாவின் அலுவல்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். மொழி, கலாசாரத்தின் அடிப்படையில் பணியாளர்களைப் பிரிப்பது நாகரிக சமுதாயத்திற்கு உகந்ததல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.