டெல்லி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (ஜூன் 13) கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வரை விமானத்தில் சென்றுள்ளார்.
அப்போது விமானத்தில் இருந்த இளைஞர் அணியைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கக் கடத்தல் வழக்கு குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக முழக்கம் எழுப்பி, அவரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி கேரளா காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் விமானத்தில் நடைபெற்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., சிவதாசன் விமானப்போக்குவரத்துத்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வரை இண்டிகோ விமானத்தில் சென்றபோது, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குற்றம்புரிந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
விமான அலுவலர்கள் கூறுகையில், "மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் ஸ்க்ரப் டைபஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!