தென்மேற்கு வங்காள விரிகுடாவில் புரெவி புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கேரளாவின் ஏழு தெற்கு மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 முதல் 5ஆம் தேதி வரை பலத்த மழை, காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
வடக்கில், டிசம்பர் 4, 7, 8 ஆகிய தேதிகளில் இமாச்சலப் பிரதேசத்தின் உயரமான மலைகளில் மழை, பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை துறை கணித்துள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் மிதமான மூடுபனியுடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களைத் தங்கவைப்பதற்காக இரண்டாயிரத்து 849 பாதுகாப்பு முகாம்கள் தயாராகவுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளனர். புரெவி புயல் வெள்ளிக்கிழமைக்குள் திருவனந்தபுரத்தை எட்டும்.
புயல் தொடர்பான விடயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்துள்ளோம். மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் அவரிடம் விளக்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மக்கள் யாரும் புயல் குறித்து கவலைப்பட வேண்டாம். நிலைமையை எதிர்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 175 குடும்பங்களைச் சேர்ந்த 690 உறுப்பினர்கள் ஏற்கனவே 13 பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை நிலவரத்தின் அடிப்படையில் சபரிமலை யாத்திரைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். ஏற்கனவே கரோனா தடுப்புப் பணிகளில் சுமையாக இருக்கும் சுகாதாரத் துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டிசம்பர் 5ஆம் தேதிவரை கேரள கடற்கரையில் மீன்பிடிக்க மீனவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை) மற்றும் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் (6 செ.மீ. முதல் 20 செ.மீ. மழை) விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல்!