மலப்புரம் : கேரளாவில் பயணிகள் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த கோர விபத்தில் படகின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் அடுத்த தனூர் பகுதியில் நேற்று (மே. 7) 40 பயணிகளுடன் சென்ற இரண்டடுக்கு சுற்றுலா படகு, மாலை 6.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 22 பேர் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா படகில் 25 பேர் மட்டுமே, பயணிக்கக் கூடிய நிலையில் அளவுக்கு அதிகமாக 40 பயணிகளை ஏற்றியதே இந்த கோர விபத்துக்கான காரணம் என மீட்புப் படையினர் தெரிவித்து உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடலோர காவல் படையினர், உள்ளூர் மீனவர்கள், போலீசார் என தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கேரள படகு விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும், பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் தலைமையிலான அவசர ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.