திருவனந்தபுரம் : எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று (அக். 29) காலை மதவழிப்பாட்டு நிகழ்ச்சியின் போது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறும், விடுமுறையிலுள்ள மருத்துவ பணியாளர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியீடுள்ள அறிக்கையில், "களமச்சேரியிலுள்ள மாநாட்டு மையத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற மதவழிப்பாட்டு பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேரளா சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் கேரளா மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், எர்ணாகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள, அனைத்து மருத்துவமனைகளையும் தயார் செய்யவும், விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எர்ணாகுளம் பொது மருத்துவமனை, கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளைத் தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளைத் தயார் செய்யக் கூடுதல் பணியாளர்கள் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.