திருவனந்தபுரம் :பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என மாநில பாஜக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். வரும் 24 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சிக்கு செல்கிறார்.
அங்கு பாஜக ஆதரவு அமைப்பு நடத்தும் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பாஜக இளைஞர் பாசறை நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அன்றிரவு தாஜ் மலபார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் பிரதமர் மோடி மறுநாள் கொச்சியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார்.
காலை 10.30 மணிக்கு கேரளா மாநிலத்திற்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வரை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பிரதமர் மோடி பல்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து அங்குள்ள மத்திய மைதானத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றுகிறார். இந்த விழாவின் போது ரயில்வேத் துறையின் நான்கு திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் தொழிநுட்ப நகருக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.