திருவனந்தபுரம் :கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றக் கோரிய தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வருகிறது. மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து அரசு முடிவு செய்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தை கேரளம் என பெயர் மாற்றம் செய்யக் கோரிய தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப் பேரவையில் சபாநாயகர் ஏ.என். சம்சீர் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தினார். மாநில பெயர் மாற்ற தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து சட்டப்பேரவையில் கேரளம் பெயர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஏ.என் சம்சீர் தெரிவித்தார். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கோப்புகளில் மாநில அரசின் பெயரை கேரளம் என மாற்றக் கோரி மாநில அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக தீர்மானம் குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் கேரளம் என்றும் அதேநேரம் மற்ற மொழிகளில் கேரளா என தொடரும் என்றும் கூறினார்.
சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே மலையாளம் பேசும் சமூக மக்களுக்கு என ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை இருந்ததாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கோப்புகளில் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றக் கோரி சட்டப்பேரவை கோரிக்கை விடுப்பதாக பினராயி விஜயன் கூறினார்.
முன்னதாக மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரளா சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட். 8) நிறைவேற்றப்பட்டது. அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், மற்ற மாநிலங்களில் தொடர் எதிர்ப்பு குரல் ஒலித்து வருகிறது. அந்த வகையில் கேரள சட்டப் பேரவையில் மத்திய பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (ஆகஸ்ட். 8) தாக்கல் செய்தார். தீர்மானம் மீதான விவாதத்தை தொடர்ந்து சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க :மக்களவையில் ராகுல் காந்தி முத்தம்? பெண் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார்?