மலப்புரம்:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தானூர் என்னும் ஊர் அப்பகுதியில் சுற்றுலாத்தலம் ஆகும். அங்குள்ள தூவல் தீரம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இந்நிலையில் ஆறும், கடலும் ஒன்று சேரும் முகத்துவாரம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தண்ணீரில் மூழ்கி, 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 10 பேரை மீட்ட மீட்புப் படை வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், படகு உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மீன்பிடி படகை, விதிமுறை மீறி சுற்றுலாப் படகாக மாற்றியதும் அம்பலமானது.