ஹைதராபாத்: பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான கே சந்திரசேகர் ராவ், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான (Telangana Assembly Election 2023) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான தெலங்கானா பவனில் வைத்து 119 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியலை முதலமைச்சர் வெளியிட்டார்.
இந்த பட்டியலின் அடிப்படையில், தெலங்கானா மாநிலத்தின் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள காஜ்வல் சட்டமன்ற தொகுதி மற்றும் கம்மாரெட்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கேசிஆர் போட்டியிடுகிறார். மேலும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர் ராவ், “வருகிற அக்டோபர் 16 அன்று வாரங்கலில் வைத்து கட்சியின் அறிக்கையை வெளியிட உள்ளோம். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள், பாரபட்சம் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்படுவர்” என தெரிவித்தார்.
முன்னதாக, தற்போதைய சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதற்கு பிஆர்எஸ் கட்சி முனைப்பு காட்டுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கட்சி நிர்வாகிகள் சிலருக்கு சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் வழங்கப்படுவதாகவும், பிற நிர்வாகிகளுக்கு எம்எல்சி உள்பட இதர பதவிகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.