டெல்லி:காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சீன விசா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் டெல்லி அலுவலகத்தில் இன்று (டிச.23) ஆஜராகினார். பஞ்சாப் மாநிலத்தின் மின் திட்டப்பணிகள் தொடர்பாக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்குவதற்காக ரூ.50 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2011ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக, கார்த்தி சிதம்பரம் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கணக்காளர் பாஸ்கர ராமன் மற்றும் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த சிபிஐ வழக்கின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று (டிச.23) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் முன்பு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "இதுவரை 20வது முறை அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் ஆஜராகியுள்ளேன். அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒரே கேள்வியை பலமுறை கேட்டு வருகின்றனர். அதே பதிலை நானும் பல முறை தெரிவித்து வருகிறேன்.
சிபிஐ இந்த வழக்கை ஒன்றும் இல்லை என ஒதுக்கி வைத்துள்ள நிலையில், அதனை அமலாக்கத் துறையினர் எடுத்து என்னிடம் என்ன கேட்க விரும்புகிறார்கள் என தெரியவில்லை. எனது வழக்கறிஞர் 100 பக்கம் கொண்ட விரிவான பதிலை ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போது கிறிஸ்துமஸ் வரவுள்ளதால், வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள என்னை அழைத்துள்ளனர்” என அளித்துள்ளார்.
இதையும் படிங்க:எண்ணூர் எண்ணெய் கழிவு விவகாரம்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு!