டெல்லி:கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 33 தொகுதிகளில் அந்த கட்சி முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 43.11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வம்சி சந்த் ரெட்டி கூறுகையில், "கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி அடுத்து வரப்போகும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சித்தது. ஆனால், கர்நாடகா மக்கள் தற்போது பாஜக அல்லாத தென்னிந்தியாவை உருவாக்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, பாஜகவுக்கு பெரும் தோல்வியாகும். பாஜகவிடம் இருந்த மத்தியப்பிரதேச மாநிலத்தை மீட்டோம். சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றினோம். இதேபோல் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை, காங்கிரஸ் தோற்கடிக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Karnataka Election results : ஆர்.வி.தேஸ்பாண்டே, கலி ஜனார்த்தன ரெட்டி, சசிகலா ஜொல்லே உள்ளிட்டோர் வெற்றி!